| திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் | 
| ஆறாம் திருமுறை | 
| 6.97 திருவினாத் திருத்தாண்டகம் | 
| அண்டங் கடந்த சுவடு முண்டோ அனலங்கை யேந்திய ஆட லுண்டோ
 பண்டை யெழுவர் படியு முண்டோ
 பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
 கண்ட மிறையே கறுத்த துண்டோ
 கண்ணின்மேற் கண்ணொன்று கண்ட துண்டோ
 தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ
 சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
 
 | 1 | 
| எரிகின்ற இளஞாயி றன்ன மேனி இலங்கிழையோர் பாலுண்டோ வெள்ளே றுண்டோ
 விரிகின்ற பொறியரவத் தழலு முண்டோ
 வேழத்தி னுரியுண்டோ வெண்ணூ லுண்டோ
 வரிநின்ற பொறியரவச் சடையு முண்டோ
 அச்சடைமேல் இளமதியம் வைத்த துண்டோ
 சொரிகின்ற புனலுண்டோ சூல முண்டோ
 சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
 
 | 2 | 
| நிலாமாலை செஞ்சடைமேல் வைத்த துண்டோ நெற்றிமேற் கண்ணுண்டோ நீறு சாந்தோ
 புலால்நாறு வெள்ளெலும்பு பூண்ட துண்டோ
 பூதந்தற் சூழந்தனவோ போரே றுண்டோ
 கலாமாலை வேற்கண்ணாள் பாத் துண்டோ
 கார்க்கொன்றை மாலை கலந்த துண்டோ
 சுலாமாலை யாடரவந் தோள்மே லுண்டோ
 சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே.
 
 | 3 | 
| பண்ணார்ந்த வீணை பயின்ற துண்டோ பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
 உண்ணா வருநஞ்ச முண்ட துண்டோ
 ஊழித்தீ யன்ன ஒளிதா னுண்டோ
 கண்ணார் கழற்காலற் செற்ற துண்டோ
 காமனையுங் கண்ணழலாற் காய்ந்த துண்டோ
 எண்ணார் திரிபுரங்க ளெய்த துண்டோ
    எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.
 
 | 4 | 
| நீறுடைய திருமேனி பாக முண்டோ நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ
 கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ
 கொல்புலித்தோ லுடையுண்டோ கொண்ட வேடம்
 ஆறுடைய சடையுண்டோ அரவ முண்டோ
 அதனருகே பிறையுண்டோ அளவி லாத
 ஏறுடைய கொடியுண்டோ இலய முண்டோ
 எவ்வகையெம் பிரானாரைக் கண்ட வாறே.
 
 | 5 | 
| பட்டமுந் தோடுமோர் பாகங் கண்டேன் பார்திகழப் பலிதிரிந்து போதக் கண்டேன்
 கொட்டிநின் றிலயங்க ளாடக் கண்டேன்
 குழைகாதிற் பிறைசென்னி யிலங்கக் கண்டேன்
 கட்டங்கக் கொடிதிண்டோ ளாடக் கண்டேன்
 கனமழுவாள் வலங்கையி லிலங்கக் கண்டேன்
 சிட்டனைத் திருவால வாயிற் கண்டேன்
 தேவனைக் கனவில்நான் கண்ட வாறே.
 
 | 6 | 
| அலைத்தோடு புனற்கங்கை சடையிற் கண்டேன் அலர்கொன்றைத் தாரணிந்த வாறு கண்டேன்
 பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
 பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
 கலிக்கச்சி மேற்றளியே இருக்கக் கண்டேன்
 கறைமிடறுங் கண்டேன் கனலுங் கண்டேன்
 வலித்துடுத்த மான்றோ லரையிற் கண்டேன்
 மறைவல்ல மாதவனைக் கண்ட வாறே.
 
 | 7 | 
| நீறேறு திருமேனி நிகழக் கண்டேன் நீள்சடைமேல் நிறைகங்கை யேறக் கண்டேன்
 கூறேறு கொடுமழுவாள் கொள்ளக் கண்டேன்
 கொடுகொட்டி கையலகு கையிற் கண்டேன்
 ஆறெறு சென்னியணி மதியுங் கண்டேன்
 அடியார்கட் காரமுத மாகக் கண்டேன்
 ஏறேறி இந்நெறியே போதக் கண்டேன்
 இவ்வகையெம் பெருமானைக் கண்ட வாறே.
 
 | 8 | 
| விரையுண்ட வெண்ணீறு தானு முண்டு வெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு
 சுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு
 சூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு
 அரையுண்ட கோவண ஆடை யுண்டு
 வலிக்கோலுந் தோலு மழகா வுண்டு
 இரையுண் டறியாத பாம்பு முண்டு
 இமையோர் பெருமா னிலாத தென்னே.
 
 | 9 | 
| மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
 ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
 ஓரூர னல்லனோ ருவம னில்லி
 அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்
 அவனருளே கண்ணாகக் காணி னல்லால்
 இப்படியேன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
 இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ னாதே.
 
 | 10 | 
| பொன்னொத்த மேனிமேற் பொடியுங் கண்டேன் புலித்தோ லுடைகண்டேன் புணரத் தன்மேல்
 மின்னொத்த நுண்ணிடையாள் பாகங் கண்டேன்
 மிளிர்வதொரு பாம்பும் அரைமேற் கண்டேன்
 அன்னத்தே ரூர்ந்த அரக்கன் றன்னை
 அலற அடர்த்திட்ட அடியுங் கண்டேன்
 சின்ன மலர்க்கொன்றைக் கண்ணி கண்டேன்
 சிவனைநான் சிந்தையுட் கண்ட வாறே.
 
 | 11 | 
| திருச்சிற்றம்பலம் |